6 பெண்களை கொடூரமாக கொன்ற 3 பேர் கைது

நாமக்கல் : நாமக்கல், கரூர் பகுதியில் வீடு புகுந்து 6 பெண்களை கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் டாக்டர் சிந்து (33). இவரது கணவர் டாக்டர் பாலசுப்பிரமணியம். இருவரும் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் பணியாற்றினர். அம்மா சத்தியவதியை பார்ப்பதற்காக டாக்டர் சிந்து நாமக்கல் வந்திருந்தார். கடந்த அக்டோபர் 13-ம் தேதி, சத்தியவதி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், சத்தியவதி, டாக்டர் சிந்து, அவரது பாட்டி விசாலாட்சியை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர், வீட்டில் இருந்த 28 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். கடந்த மாதம் 28-ம் தேதி கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியை சேர்ந்த கல்யாணி (50), அவரது மகள் கலையரசி (22), பேத்தி தாரணிகா (5) ஆகியோரும் இதே முறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் கொள்ளை போனது. இந்த 2  சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடிவந்தனர்.

பரமத்தியில் கள்ளக்காதல் கொலை வழக்கில் கைதான இளங்கோ (25), திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தேனி மாவட்டம் கமுதியை சேர்ந்த சந்தானம் (23), வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் திருட்டு வழக்கில் கைதான காமராஜ் (32) மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜாமீனில் வெளியே வந்ததும் தடயங்கள் இன்றி கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளனர். பரமத்தியை அடுத்த குப்பிச்சிபாளையத்தில் 2.5 கிலோ வெள்ளி கொள்ளையடித்துள்ளனர். அதன்பின் நாமக்கல் மற்றும் கரூரில் பெண்களை கொலை செய்துவிட்டு கொள்ளையடித்தது தனிப்படை விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதை அறிந்த இளங்கோ, குமாரபாளையத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர் வீட்டில் தஞ்சமடைந்தார். அவரையும் மற்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த நகைகளை எங்கெங்கு விற்றுள்ளனர் என அறிந்து, அவற்றையும் போலீசார் மீட்டனர். சாட்சியே இருக்கக்கூடாது என்ற நோக்கில் குழந்தையையும் இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்துள்ளனர். ஆண்கள் இல்லாத நேரமாக பார்த்து இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பிற்பகல் 3 மணியளவில் பெண்கள் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு கதவை தட்டுவார்கள். கதவை திறந்ததும் பெண்களை தாக்கி விட்டு உள்ளே புகுந்து விடுவார்கள். வீட்டில் இருப்பவர்களை கட்டிப் போட்டுவிட்டு அவர்களை மிரட்டி பணம், நகை இருக்கும் இடங்களை தெரிந்து கொண்டு அனைத்தையும் சுருட்டி விடுவார்கள். கொள்ளை முடிந்ததும் அனைவரையும் சாவகாசமாக கழுத்தை அறுத்து கொன்று விட்டு தப்பிச் செல்வார்கள் என போலீசார் கூறினர். கொள்ளையர்கள் மூவரும் கரூர் பாலப்பட்டியில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி இருந்தனர். கொள்ளையடித்த நகை, பணம் ஆகியவற்றை வாணியம்பாடியில் பதுக்கி வைத்திருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து தனிப்படை போலீஸார் வாணியம்பாடி விரைந்தனர். அங்கு சுமார் 88 பவுன் தங்க நகைகள், இரண்டரை கிலோ வெள்ளி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசுக்கு பாராட்டு

6 பெண்கள் கொலை வழக்கில் நாமக்கல் கூடுதல் எஸ்பி சுப்புலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர் ஏற்கனவே சென்னையில் சிபிசிஐடி பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றியவர்.
தனிப்படை போலீசாருடன் நாமக்கல் ஏ.எஸ்.பி. சுப்புலட்சுமி, டிஎஸ்பி பரமேஸ்வரன் ஆகியோரிடம் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனடிப்படையில் சந்தேக பொறியில் இருந்தவர்களை தொடர்ந்து கண்காணித்து, கொலையாளிகள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினரை ஏடிஜிபி ஜார்ஜ், கோவை மேற்கு மண்டல ஐஜி சுந்தர மூர்த்தி, சேலம் சரக டிஐஜி சஞ்சய் குமார், நாமக்கல் மாவட்ட எஸ்.பி., சத்தியப்பிரியா ஆகியோர் பாராட்டினர்.

துடிக்க துடிக்க குழந்தையை கொன்றனர் :

கரூரில் கல்யாணி(50 ) அவரது மகள் கலையரசி (22 ) கழுத்தை அறுத்து கொலைசெய்யும் போது அங்கிருந்த சிறுமி தாரணிகா(5) அழுதுள்ளார். அப்போது கொலைகாரர்கள் சிறுமியை சுவற்றை பார்த்து நின்று 1, 2, 3 என 50 வரை சொல்லு என கூறினர். சிறுமியும் சுவற்றை பார்த்து அழுதுகொண்டே எண்ணியுள்ளது. அதற்குள் இரண்டு பெண்களையும் துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு பின் குழந்தை தரணிகா வையும் கொன்றுள்ளனர். கொலைக்கு சாட்சியே இருக்கக் கூடாது என்று கொலை செய்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

 

நன்றி : தமிழ்முரசு

Leave a Reply

Your email address will not be published.