விளையாட்டு வினையானது: கார் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பரிதாப பலி

மேற்குவங்கம், பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர், ஜாய்தேப் மஜூம்தார். அவருடைய  மனைவி ரூபா. இவர்களது மகன்,மகள்  தேப்ராஜ், சினேகா. ஜாய்தேப் மஜும்தார் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில், ஹசர்துவாரி அரண்மனையை சுற்றிபார்க்க  சென்றனர்.

அரண்மனையைச் சுற்றி பார்த்து விட்டு, அனைவரும் காரில் புறப்பட தயாராயினர். கார், பாகீரதி ஆற்றின் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது காரில் ரூபாவும், குழந்தைகளும் ஏறி அமர்ந்தனர். காரின் டிரைவரும், ஜாய்தேப்பும் சற்று தூரத்தில் இருந்தனர். இந்த நேரத்தில், காரில் ஏறி அமர்ந்திருந்த தேப்ராஜ், திடீரென கியரை மாற்றினான். இதனால், கார் பின்னோக்கி நகரத் துவங்கியது. இதைப் பார்த்த ஜாய்தேப், ஓடி வந்து காரை நிறுத்த முயன்றார், முடியவில்லை. அதனால், அவரும் காருடன் சேர்ந்து ஆற்றுக்குள் சென்றார்.

அதேநேரத்தில், கார் பின்நோக்கி நகர்வதைப் பார்த்த, வேறொரு காரின் டிரைவர், கதவை திறந்து சினேகாவை மட்டும் காரில் இருந்து வெளியே இழுத்துப்போட்டார். அதனால், சினேகா மட்டும் தப்பினார். காரை நிறுத்த முயன்ற ஜாய்தேப், காரில் அமர்ந்திருந்த அவரின் மனைவி ரூபா, மகன் தேப்ராஜ் ஆகிய மூன்று பேரும், ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து சென்று பொதுமக்களின் உதவியோடு, ஆற்றில் இருந்து காரை, கமீட்டனர். ஆனால், காரில் யாரும் இல்லை. இதனால், மூவரின் உடல்களை தேடும் பணி நடந்தது. நேற்று காலை, ஜாய்தேப் மஜூம்தாரின் உடல் ஆற்றில் மிதந்தது. ரூபா மற்றும் தேப்ராஜ் ஆகியோரது உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவற்றை தேடும் பணி விரைந்து நடந்து வருகிறது .

Leave a Reply

Your email address will not be published.