வகுரம்பட்டி நாமக்கல் நகராட்சியுடன் இணைப்பு

நாமக்கல் நகராட்சி
நாமக்கல் நகராட்சி

வகுரம்பட்டி பஞ்சாயத்து நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்படும் என, நகராட்சி கவுன்சில் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்  சேர்மன் கரிகாலன் தலைமையில் நகராட்சிக் கவுன்சில் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் நடந்த விவாதம் :

சரவணன் (தி.மு.க.,): தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையை சமாளிக்க, கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைந்து திறக்க வலியுறுத்தி, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்ப வேண்டும்.
சேர்மன் கரிகாலன்: கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பது தொடர்பாக, தமிழக முதல்வர், வல்லுநர் குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவினர் ஆய்வு செய்து வரும் செய்திகள் வெளியாகி வருகின்றன. எனவே, முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்பதால், தீர்மானம் நிறைவேற்றுவது தேவையற்றது.
ஷேக் நவீத் (காங்கிரஸ்): எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் பணிகளை தெரியப்படுத்துவதில்லை. குறிப்பாக, குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வார்டுக்கு உட்பட்ட பயனாளிகள் நீக்கம் குறித்து எனக்கு தெரியப்படுத்தவில்லை. அதற்கான காரணம் தெரிய வேண்டும்.
சேர்மன்: இனி வரும் காலங்களில் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் பணிகள் குறித்து தெரியப்படுத்தப்படும்.
குப்புசாமி (அ.தி.மு.க.,): நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட ஒன்பது வார்டுகளில், அடிப்படை வசதி மேம்படுத்த 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், ஒரு கோடி ரூபாயை பழைய நகராட்சி வார்டுக்கு ஒதுக்கினால், அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வசதியாக இருக்கும்.
சேர்மன்: நகராட்சி எல்லை, 55 கி.மீ., என விரிவடைந்துள்ளது. எனவே, புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் அடிப்படை வசதி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, படிப்படியாக அனைத்து வார்டுகளுக்கும் நிதி வழங்கப்படும்.
சரவணன் (அ.தி.மு.க.,): வார்டுக்கு உட்ப்பட்ட பகுதியில், சாலை, சாக்கடை சுத்தம் செய்யும் ஊழியர்கள், தண்ணீர் திறந்து விடுபவர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம். அதுபோல், கோடை காலத்தில் எழும் குடிநீர் பிரச்னை, நகராட்சிக்கு கெட்ட பெயர் தந்துவிடும்.
சேர்மன்: தண்ணீர் பிரச்னை சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊழியர் பிரச்னைக்கும் தீர்வு காணப்படும்.

என விவாதம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.