ரேஷன் கார்டு புதுப்பிக்கும் பணி – ஜனவரி 2012 ல் துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் கார்டு புதுப்பிக்கும் பணி, வரும் 2012 ஜனவரி மற்றும்  ஃபிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்று, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம், வரும் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 31ம் தேதி வரை, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புதுப்பிக்கும்போது, புழக்கத்தில் உளள ரேஷன் கார்டு அட்டையில் ஆண்டு குறிப்பிடாமல் உள்ள உள்தாளின் மேல் பகுதியில், 2012 என முத்திரையிட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

 

ரேஷன் கார்டு புதுப்பிக்கும்போது, அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், முகவரி, ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மற்ற நபர் சேர்த்தல், நீக்கல், எரிவாயு உருளை விவரம் ஆகியவற்றை வாய்மொழியாக சேகரித்து, அதன் அடிப்படையில் ரேஷன் கார்டு தொகுப்பு மேம்படுத்தப்படும்.அதன்பின், விசாரணை செய்து, ரேஷன் கார்டு புதுப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கார்டு புதுப்பிக்கும் பணி, 2012 ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் நடக்க உள்ளது. எனவே, குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் கடைக்கு பொருள் வாங்க செல்லும்போது, கடை பணியாளர்களிடம், மேற்குறிப்பிட்ட விவரங்களை வாய்மொழியாக தெரிவிக்க வேண்டும்.அந்த விவரங்கள், ரேஷன் கார்டு மற்றும் கடையின் வழங்கல் பதிவேட்டில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்படவுடன், 2012ம் ஆண்டு வழங்கல் பதிவேட்டில் கையெழுத்து, இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும.
இவ்வாறு கையெழுத்து, விரல் ரேகை பதிந்தால், புதுப்பித்தல் பணி முடிவுற்றதாக கருதப்படும். ரேஷன் கார்டுதாரர்கள் நலன் கருதி சேகரிக்கப்படும் இந்த விவரங்களை, பொருள் பெறச் செல்லும்போது, மக்கள் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.