பொதுத்தேர்வின் போது அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும்நடவடிக்கை

Hsc Examபள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்ததாவது :

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் செயல்பட வேண்டும். பிளஸ் 2 தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. பொதுத் தேர்வு முடிகின்ற வரையில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது.

பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு சில தவறுகள், குழப்பங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு அது போல எதுவும் நடக்கக் கூடாது. அப்படி ஏதாவது நடந்தால் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள்கள் எடுத்து செல்லும்போது பறக்கும் படை உதவியாக இருப்பார்கள். கடந்த ஆண்டு ஒவ்வொரு பள்ளியிலும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளில் எவ்வளவு தேர்ச்சி இருந்தது என்பது குறித்து விவரம் சேகரித்து அனுப்ப வேண்டும். தேர்ச்சி குறைவாக இருக்கும் பள்ளிகளில், அதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியும் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறுவதற்காக தலைமை ஆசிரியர்களை அழைத்து கூட்டம் போட வேண்டும். அதேபோல, ஒவ்வொரு பள்ளிக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரடியாக சென்று பார்த்துவர வேண்டும். தேர்வு நேரத்தில் வாகனம் தேவைப்பட்டால் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் செலவு செய்து கொள்ளலாம். 100 சதவீத தேர்ச்சியை காட்டும் பள்ளிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். குறிப்பாக 433 இளநிலை உதவியாளர்கள் இன்னும் ஒரு வாரத்தில் நியமிக்கப்படுவார்கள். இதற்கான உத்தரவு வந்ததும், சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் உடனடியாக நியமனங்களை செய்ய வேண்டும். இதுதவிர, தரம் உயர்த்தப்பட்ட 710 பள்ளிகளில், தற்காலிக பணியாளர்களாக ஒரு ஆண்டுக்கு 710 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். பின்னர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் 5,000 பேர் நியமிக்கப்படுவார்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்திலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு இணையாக ஒரு அலுவலரும், இயக்குநர் நிலையில் ஒரு அதிகாரியும், இணை இயக்குநர் நிலையில் ஒரு அதிகாரி என 4 பேர் இன்னும் ஒரு வாரத்தில் நியமிக்கப்படுகின்றனர்.

தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தால், தேர்வு மையம் வைக்க வழங்கப்பட்ட உத்தரவை சரிபார்க்க வேண்டும். தேர்வு மையங்களில் கூடுதலாக மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்பதற்காக தரையில் உட்கார வைக்க கூடாது. சாமியானா பந்தல் போட்டு அதிலும் உட்கார வைக்க கூடாது. கண்டிப்பாக இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும். வினாத்தாள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வினாத்தாள் எடுத்து வரும் நபர்களுக்கு வாகன வசதியும், பாதுகாப்பு வசதியும் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சிவபதி அறிவுரை வழங்கினார்.

‘சைடு பிசினஸ்’ ஆசிரியர்களை கண்காணிக்க உத்தரவு

பள்ளி ஆசிரியர்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும். மேலும், ஆசிரியர்களையும் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் சிவபதி தெரிவித்தார். இன்றைய நிலையில் ஆசிரியர்களின் நிலை குறித்து, ஆய்வுக் கூட்டத்தில் பேசிய கல்வி அமைச்சர் சிவபதி வருத்தப்பட்டு கூறியதாவது:பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குழுக்களாக செயல்படுகிறார்கள். படிப்பு சொல்லிக் கொடுக்கும் வேலையை தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். கந்து வட்டி விடுவது, ஜெராக்ஸ் கடை நடத்துவது போன்ற சைடு பிசினஸ் செய்கிறார்கள். இப்படி இருந்தால் பள்ளி முடிந்து எப்போது போகலாம் என்ற எண்ணம்தான் அவர்களுக்கு இருக்கும். தலைமை ஆசிரியர்கள் சரியாக இருக்க வேண்டும்; கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் கண்டிப்புடன் கூற வேண்டும். ஒழுக்கம் இல்லாமல் போனால் மாணவர்களுக்கு பிரச்னையாக இருக்கும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்கும்போது, திருமணம் ஆனவர்களையே நியமிக்க வேண்டும். ஆசிரியர்கள் வெளியில் என்ன பணி செய்கிறார்கள் என்பதை கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.