பிக்சட் டெபாசிட் வட்டியை வங்கிகளே முடிவு செய்யலாம்

வங்கிகளில் பிக்சட் டெபாசிட் மீதான வட்டி நிர்ணயிப்பதில் தனது கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி விலக்கி கொண்டுள்ளது. வங்கிகள் விருப்பம் போல வட்டியை தீர்மானிக்க அனுமதி அளித்துள்ளது. வங்கிகளின் சொத்து மேலாண்மையில் முக்கிய பங்கு வகிப்பது பிக்சட் டெபாசிட் திட்டங்கள். சேமிப்பு கணக்கில் வாடிக்கையாளர்கள் பணம் போடுவது, எடுப்பது என அதிக நடவடிக்கைகள் இருக்கும். எனவே, பெரும்பாலும் அதில் குறைந்த அளவு இருப்பு வைத்திருப்பது வழக்கம். சேமிப்பு கணக்குக்கு வட்டி குறைவு என்பதும் அதற்கு காரணம்.

எனவே, சேமிப்பு கணக்குகள் மூலம் வங்கியின் நிதி ஆதாரத்துக்கு அதிக பலனில்லை. ஆனால், பிக்சட் டெபாசிட் திட்டங்கள் வங்கியின் நிதி ஆதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக வட்டி கிடைப்பதால் அதில் 6 மாதம் முதல் 5 ஆண்டு வரை அதிக தொகையை வாடிக்கையாளர்கள் டெபாசிட் பெறுகின்றனர்.

பிக்சட் டெபாசிட் போட்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன் திரும்ப பெறும்போது வங்கிகள் அபராத வட்டி விதித்து வந்தன. ஏனெனில், குறிப்பிட்ட காலம் வரை முதலீடு நிச்சயம் என கருதி அதிக வட்டி அளிக்கும் நிலையில், பாதியில் டெபாசிட் திரும்ப பெறப்படும்போது ஏற்படும் வட்டி இழப்பை தவிர்க்க அபராத வட்டியை வங்கிகள் வசூலித்தன.

ஆனால், அதிக வட்டி கிடைக்கும் வேறு திட்டங்களுக்கு மாற இந்த அபராத வட்டி தடையாக இருப்பதாக கூறி அதை வசூலிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. பிக்சட் டெபாசிட் வட்டி நிர்ணயிப்பதிலும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால், பிக்சட் டெபாசிட்களை இடையில் திரும்ப பெறுவது அதிகரித்து, வங்கிகளின் சொத்து மற்றும் கடன் நிர்வகிப்பில் பிரச்னை எழுந்தது.

இதையடுத்து, பிக்சட் டெபாசிட் வட்டியை வங்கிகளே மீண்டும் விருப்பம்போல நிர்ணயிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இதுதொடர்பாக, வங்கிகளுக்கு திங்கட்கிழமை அது சுற்றறிக்கை அனுப்பியது. முன்கூட்டி திரும்ப பெறும் பிக்சட் டெபாசிட் மீது அபராத வட்டி வசூலிப்பது, டெபாசிட் வட்டியை நிர்ணயிப்பது ஆகியவற்றை வங்கிகள் விருப்பம்போல மேற்கொள்ள அதில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால், பிக்சட் டெபாசிட் வட்டியில் வங்கிகள் இடையே போட்டி ஏற்பட்டு, சொத்து மற்றும் கடன் நிர்வாகம் சீரடையும் என்று வங்கி உயரதிகாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

- Dinakaran

Leave a Reply

Your email address will not be published.