நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெகநாதன் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த குமரகுருபரன், சென்னை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார்.

நாமக்கல் மாவட்டத்தின் 10வது ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஜெகநாதன் (48) நேற்று(07-09-2012) பொறுப்பேற்றார்.

புதிய ஆட்சியர் ஜெக நாதன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது : அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது அரசு அலுவலர்களின் கடமை. இதை நிறைவேற்ற அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையும். எனவே மாவட்ட நிர்வாகத்துக்கு அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். என்று ஆட்சியர் ஜெகநாதன் தெரிவித்தார்.
எம்.எஸ்.சி, எம்.பில் பட்டதாரியான ஜெகநாதன் அரசியல் அறிவியலில் பி.எச்டி முடித்துள்ளார். இவர் கடந்த 1991ல் ஊரக வளர்ச்சித் துறையில் கோட்ட வளர்ச்சி அலுவலராக பணியில் சேர்ந்த இவர், 97ல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். இதே நிலையில், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
2008ல் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று சென்னையில் பணியாற்றினார். 2011ல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று சென்னை நகராட்சி நிர்வாக இணை ஆணையராக பணியாற்றினார். அங்கிருந்து இடமாறுதலில் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 97ம் ஆண்டு முதல் நாமக்கல் மாவட்டம் தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இம் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ரோல்கும்லின் புக்ரில் நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து தயானந்த் கட்டாரியா, ராமமூர்த்தி, ராஜேந்திரன், சேவியர் கிறிசோநாயகம், சுந்தரமூர்த்தி, சகாயம், மதுமதி, குமரகுருபரன் ஆகியோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளனர். ஜெகநாதன் இம் மாவட்டத்தின் 10வது ஆட்சித்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.