நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்திய 2 குழந்தைகள் கொலை வழக்கு

நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு குழந்தைகள் கொலை வழக்கில் சித்திக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாமக்கல்-திருச்சி சாலை எஸ்.பி.எம். காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் நேரு(48). அரசு பேருந்தில் ஓட்டுனராக வேலை செய்கிறார். இவரது முதல் மனைவி சரஸ்வதி.இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.இதனால், ஒரு குழந்தையை தத்து எடுத்து சக்திவேல் என பெயரிட்டு வளர்த்தனர். இதையடுத்து, 3வது மாதத்தில் சரஸ்வதி கர்ப்பமடைந்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஷாலினி என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். 2 பேரையும் உடன் பிறந்த அண்ணன்- தங்கையாக வளர்த்து வந்தனர். இந்நிலையில், சில ஆண்டுகளில் சரஸ்வதி இறந்து விட்டார். இதைதொடர்ந்து அமலா என்பவரை நேரு 2வது திருமணம் செய்தார்.அமலாவுக்கு ராகவி, கவின் என இரு குழந்தைகள் பிறந்தனர். 4 குழந்தைகளையும் நேரு வளர்த்து வந்தார். சக்திவேலுவும், ஷாலினியும் 3ம் வகுப்பு படித்து வந்தனர். அவர்கள் மீது அமலாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த குழந்தைகள் உயிரோடு இருந்தால் தனது 2 குழந்தைகளுக்கும் சரியான பாதுகாப்பு இருக்காது என கருதி கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி அதிகாலை 4 மணியளவில் நேரு வேலைக்கு சென்று விட்டார். அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல், ஷாலினி ஆகிய இருவரையும்  தலையணையால் அமுக்கி மூச்சு திணற செய்து அமலா கொலை செய்தார். பின்னர், இரு குழந்தைகளின் சடலங்களையும் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தூக்கி வீசிவிட்டார். இச்சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்போதைய நாமக்கல் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அமலாவை கைது செய்தார். இவர் மீது நாமக்கல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மணிமேகலை பாலுசாமி ஆஜராகி வாதாடினார்.  வழக்கை விசாரித்த நீதிபதி நசீர்அகமது நேற்று தீர்ப்பு கூறினார். 2 குழந்தைகளையும் கொலை செய்த அமலாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, கொலையை மறைக்க மேற்கொண்ட முயற்சிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டார்.

திட்டமிட்டு கொலை நீதிபதி தீர்ப்பு விபரம் நீதிபதி நசீர்அகமது தனது தீர்ப்பில் கூறியிருப்பதவாது: இந்த வழக்கில் எதிரி அமலா மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபனம் செய்யப்பட்டுள்ளது. அமலா இரு குழந்தைகளையும் தலையணையை வைத்து அமுக்கியுள்ளார். அப்போது, துவண்ட குழந்தைகள் இறக்கவேண்டும். எந்த வகையிலும் உயிர் பிழைக்க கூடாது என கருதி கொலை செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலையை தான் செய்ய வில்லை என்பதை மறைக்கும் வகையில் தண்ணீர் தொட்டிக்குள் பந்தை எடுத்து வீசிவிட்டு, அதனை எடுக்க சென்றபோது குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறந்தது என நம்பவைக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். அமலாவுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தன் பிள்ளைகள் 2 பேரையும் வளர்க்க வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, இந்த வழக்கில் குறைந்தபட்ச தண்டனை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குற்றத்தின் தன்மை, குற்றம்புரிந்த சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நீதிமன்றம் அமலாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையை விதிக்கிறது. இவ்வாறு நீதிபதி நசீர்அகமது தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

 

நன்றி : தினகரன்

Leave a Reply

Your email address will not be published.