நாட்டின், 66வது சுதந்திர தினவிழா, நாமக்கல்லில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பல்வேறு துறை சார்பில், 222 பேருக்கு, 33 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில், நாட்டின், 66வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அதை தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை, கலெக்டர் குமரகுருபரன் ஏற்றுக்கொண்டார். மேலும், தியாகிகளின் வாரிசுகளை பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய போலீஸார் உள்ளிட்ட அரசு ஊழியர்கர்கள், 56 பேருக்கு, நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.சிறப்பாக செயல்பட்ட அரசு ஜீப் டிரைவர்கள் ஐந்து பேருக்கு, தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
அதேபோல், வீரதீர செயல்புரிந்த போலீஸாருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.விழாவில், வருவாய்துறை சார்பில், மூன்று பேருக்கு தீ விபத்து நிவாரணம், 110 பேருக்கு முதியோர் உதவித்தொகை என, 113 பேருக்கு, 18.30 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், 12 பேருக்கு, 5.62 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது.கூட்டுறவுத்துறை சார்பில், 54 பேருக்கு, 15.38 லட்சம் ரூபாய் மதிப்பில் வாழை மகசூல் கடனுதவி வழங்கப்பட்டது. மேலும், சுகாதாரத்துறை, வேளாண் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில், 222 பேருக்கு, 32 லட்சத்து 96 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட எஸ்.பி., கண்ணம்மாள், டி.ஆர்.ஓ., செங்குட்டுவன், மாவட்ட வன அலுவலர் அனுராக் மிஸ்ரா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னையா, அனைத்து அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.