நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க.? என்று மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

 “நதிகளை இணைக்க இதுவரை மத்திய அரசு செய்துள்ள பணி என்ன? இது தொடர்பான சுருக்கமான குறிப்பை கோர்ட்டால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள நதிகளை எல்லாம் இணைக்க வேண்டும் என, பரவலாக கோரிக்கை எழுந்ததை அடுத்து, கடந்த 2002ம் ஆண்டு அக்டோபரில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், விசேஷ குழு ஒன்றை நியமித்தார். இந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்து அதில், நதிகள் இணைப்பை இரண்டு பிரிவாக மேற்கொள்ள வேண்டும் என்று , தெரிவிக்கப்பட்டது.

மேலும், நாட்டில் உள்ள நதிகளை இணைத்தால், 2050ம் ஆண்டிற்குள், 16 கோடி ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், பெரிய நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில், நதிகள் இணைப்பு தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “நாட்டில் உள்ள நதிகளை இணைக்க இதுவரை மத்திய அரசு செய்துள்ளது என்ன? இது தொடர்பான, சுருக்கமான குறிப்பை, இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவி வரும் வழக்கறிஞர் ரஞ்ஜித் குமார், ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கு முன், இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், “நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பெரும் பொருட் செலவாகும். மத்திய அரசுக்கு பெரிய அளவில் நிதிச் சுமை ஏற்படும். எனவே, செலவுகள் குறித்த அறிக்கை விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். பெரிய அளவில் செலவாகும் என, தெரிந்தால், கோர்ட் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என, தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published.