திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட் அருகே எம்.ஜி.ஆர்., முழு உருவச்சிலை

எம்.ஜி.ஆர், முழு உருவச்சிலை அமைக்க முடிவு
எம்.ஜி.ஆர், முழு உருவச்சிலை அமைக்க முடிவு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முழு உருவச்சிலை அமைக்க, நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சி கவுன்சில் கூட்டம், சேர்மன் சரஸ்வதி தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) ரவி, துணைச் சேர்மன் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் :
முருகேசன் (அ.தி.மு.க.,): திருச்செங்கோடு புது பஸ் ஸ்டாண்ட்டின் மூன்று புறமும் உள்ள நுழைவு வாயிலில் ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன.
சரஸ்வதி (சேர்மன்): புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இரண்டிலும் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கார்த்திகேயன் (அ.தி.மு.க.,): சண்முகபுரம் பகுதியில் உள்ளவர்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேர்மன்: தாசில்தார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
அருள்குமார் (அ.தி.மு.க.,): திருச்செங்கோடு வாரச்சந்தையில், காலியிடம் அதிக அளவில் உள்ளது. அங்கு, பொதுமக்களுக்கு வசதியாக இருக்க வணிக வளாகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் நகராட்சி நிர்வாகம் வருவாய் ஈட்ட முடியும்.
ரவி (கமிஷனர்): தனியார் நிறுவனம் மூலம் கடன் பெற்று வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கலாம். தற்போது, வாரச்சந்தை வளாகம் தூய்மையாக இருக்கவும், பாதுகாக்கவும் காம்பவுண்ட் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சுதா (அ.தி.மு.க.,): நகராட்சி, 18வது வார்டு கறிக்கடை சந்து மற்றும் மஜீத் வீதிகளில், குப்பைகள் எடுக்கபடாமல் அப்படியே உள்ளது. சாக்கடைகள் தூர் வாரப்படுவதில்லை. அதனால், வார்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேர்மன்: சம்மந்தப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு பணிகள் விரைவாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முருகேசன் (அ.தி.மு.க.,): அர்த்தநாரீஸ்வர் மலைக்கோவில் கிரிவலப்பாதையில், பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க பவுர்ணமி தினம் அன்று மதியம் முதல் குடிநீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேர்மன்: குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
முன்னதாக, திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முழு உருவச் சிலை அமைக்க, அரசிடம் அனுமதி கேட்டு சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.