செங்கல் சூளைகளில் சாம்பலாகும் பனை மரங்கள்

ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியதாக கருதப்படும் பனை மரங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இயற்கை நண்பன். தமிழ்நாட்டின் அடையாளமாக பனைமரங்கள் கருதப்படுகின்றன. இந்தியாவில் தற்போது 7 முதல் 8 கோடி பனைமரங்கள் இருப்பதாகவும் இதில் சுமார் 4 கோடி பனைமரங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடைய இந்த பனைகள் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், மலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. பனை ஓலை மட்டும் இல்லாமலிருந்தால் திருக்குறள், குண்டலகேசி, வளையாபதி போன்ற காப்பியங்கள் நமக்கு கிடைக்காமல் போயிருக்கும். கடந்த நூற்றாண்டில் பனை வெல்லம் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதியாக இருந்துள்ளது. கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் வரை பனைவெல்லத்தை வெல்லும் இனிப்பு இங்கு இல்லை. கால்சியம், வைட்டமின்கள், போன்ற ஊட்டம் மிகுந்த பனைவெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்புகளை உண்பதால் எலும்புகள் நல்ல வளர்ச்சியை பெற்றது. உடல் ஆரோக்கியம் பேணப்பட்டது. தற்போது வெள்ளைச் சர்க்கரையின் ஆதிக்கத்தால் நாம் நம் பாரம்பரிய பனை வெல்லத்தின் அருமைகளை அறியும் ஆர்வத்தை குறைத்து விட்டோம். இதனால் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக அளவில் ஊட்ட சத்து குறைவால் பாதிக்கப்படும் மூன்றில் ஒரு குழந்தை இந்தியாவில் உள்ளது என்றும், ரத்தத்தில் வெள்ளை அணு குறைபாடு கொண்ட ஐந்து பெண்களில் ஒருவர் இந்தியாவில் உள்ள னர் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பனைமரங்களின் வேர்கள், ஓலை, மட்டை என அதன் பாகங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றன. ஓலைகளில் இருந்து கூடை, பாய், பெட்டி, தொப்பி, விசிறி என பல்வேறு பொருள்கள் உருவாக்கப்படுகிறது. இயற்கையான பதநீர் உடலுக்கு ஊட்டத்தை கொடுக்கிறது. பனையில் இயற்கையாக கிடைக்கும் கள் நமது புராணங்களில் சோமபானமாக சொல்லப்படுகிறது.
பனைமரங்கள் இந்தியாவில் பயிர் செய்யப்படுவதில்லை. இயற்கையாக வளரும் இந்த மரங்களின் மகத்துவம் மக்களுக்கு புரியவில்லை. பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில், தோட்டத்தின் கரைகளில் பல்லாண்டுகளாக வளர்ந்து நிற்கும் இந்த பனை மரங்களை குறி வைத்து இயங்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள் வேருடன் வெட்டி சென்று விறகாக்கி சூளைகளில் அடுக்கி சாம்பலாக்குகின்றனர்.
செங்கல்லை சுட்டெரிக்கும் விறகாக ஆண்டா ண்டு காலமாக இந்த பனைமரங்கள் வெட்டப்படுகிறது. சூளைகளுக்கு மாற்று எரிபொருள்கள் வந்த பின்னும் பனைமரங்கள் வெட்டப்படுவது இன்னும் கைவிடப்படவில்லை. மண் அரிப்பை தடுத்து நிலத்தின் வளத்தை பாதுகாக்கும், இந்த இயற்கையின் நண்பனை எரித்து சுற்றுச்சூழலை கெடுக்கும் சூளைகளை மாசுக்கட்டுப்பாட்டு துறை கட்டுப்படுத்த வேண்டும். காடுகளில் உள்ள பனைகளை வெட்ட வருவாய் துறை அல்லது மாசுக்கட்டுப்பாட்டு துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். பனைமரங்களை வெட்டுவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்து உடனடியாக விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்களின், தமிழ்நாட்டின் அடையாளமான பனைமரங்களை படங்களில் மட்டுமே காணமுடியும்.

Leave a Reply

Your email address will not be published.