குறிப்பிட்ட பள்ளிக்கு இடமாறுதல் பெற ரூ.2 லட்சம் பேரம்

அரசு, நகராட்சி, மாநகராட்சி,  உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமையாசிரியர் ஆசிரியர்களுக்கு  2012-13ம் கல்வி ஆண்டுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் ஜூன் 16ம் தேதி துவங்குகிறது.

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், பதவி உயர்வு கவுன்சலிங் என தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதை பயன்படுத்தி, சில புரோக்கர்கள் கல்லா கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே மாவட்டத்துக்குள் பணி இடமாறுதல் பெறுவதற்கு குறிப்பிட்ட தொகையை கேட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை தொடர்பு கொண்டு வற்புறுத்தி வருகின்றனர்.
அதன்படி, இரண்டு லட்சம் முதல் மூன்றரை லட்சம் ரூபாய் வரை பேரம் பேசுகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் மொபைல் ஃபோன் எண்ணை தெரிந்து கொண்டு நேரடியாகவே தொடர்பு கொண்டு பேசுகின்றனர். யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என பேசும் புரோக்கர்கள், அவர்களை தங்கள் வலைக்குள் சிக்க வைக்க பகீரத முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சொந்த மாவட்டத்திலேயே பணியாற்ற நினைக்கும் ஆசிரியர்கள், கடன் பெற்று புரோக்கர்களின் வலையில் வீழ்வது, சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. அவ்வாறு பணம் கொடுக்கத் தவறினால், வேறு மாவட்டத்துக்கு பணி மாறுதல் கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில், பல ஆசிரியர்கள் விழி பிதுங்கியுள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது
தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங், ஜூன் 16ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடக்கிறது. சென்னையில் நடக்கும் கவுன்சலிங்களில், மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
ஒரே மாவட்டத்தில், ஒன்றியத்தில் மாறுதல் பெற குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து கொள்கின்றனர். அதன்படி, பட்டியலில் உள்ள சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு பேரம் பேசுகின்றனர். குறைந்த பட்சம் இரண்டு லட்சம் முதல் அதிக பட்சம் மூன்றரை லட்சம் ரூபாய் வரை கேட்கின்றனர்.
கவுன்சலிங் என்பது வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. பணம்தான் இடத்தை தீர்மானிக்கிறது. பணம் கொடுப்பவர்களுக்கு, அவர்கள் கேட்கும் பள்ளிக்கு இடமாறுதல் வழங்குவதால், மற்றவர்கள் வேறு மாவட்டத்துக்கு பந்தாடப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.