குரூப் 2 தேர்வு வினாத்தாளை டவுன்லோடு செய்த இன்ஜினியர் கைது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், பண்ருட்டி அருகே பதுங்கியிருந்த திருக்கோவிலூரைச் சேர்ந்த இன்ஜினியரை தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக தர்மபுரி சுரேஷ்குமார், விழுப்புரம் ரங்கராஜன், திருவண்ணாமலை விவேகானந்தன், வேலூர் அன்பு, கிருஷ்ணகிரி பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான திருவண்ணாமலை கார்த்திக், விழுப்புரம் டாக்டர் சுரேஷ், இவரது தம்பி இன்ஜினியர் ரமேஷ் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.

தலைமறைவாக இருந்த 3 பேரின் பெற்றோர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரது மகன்களான டாக்டர் சுரேஷ், இன்ஜினியர் ரமேஷ் ஆகிய இருவரையும் எஸ்.ஐ. அன்பழகன் தலைமையிலான போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பண்ருட்டியில் மறைந்திருந்த இன்ஜினியர் ரமேஷை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை அங்கிருந்து தர்மபுரிக்கு அழைத்து வந்து வினாத்தாள் அவுட்டான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கார்த்திக்கின் நண்பர் என்பதும், வினாத்தாளை டவுன் லோடு செய்து சப்ளை செய்து கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத் தில் வினாத்தாள் அவுட்டானது தொடர்பாக 6வது நபராக இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 4 ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜாமீனை எதிர்த்து அப்பீல்
ஈரோடு: குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தனக்கொடி, அவரது கணவர் செந்தில், அவருக்கு உதவியதாக வரதராஜன், சுதாகர் ஆகியோரை ஈரோடு டவுன் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது மோசடி (ஐபிசி., 420), அரசை ஏமாற்றி வேலை வாங்க முயற்சிப்பது (ஐபிசி 406), கூட்டுச்சதி (126), ஐடி பிரிவு (இன்பர்மேஷன் டெக்லானஜி) ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் 4 பேருக்கும் ஈரோடு மாஜிஸ்திரேட்2 கோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள் ளது. நிபந்தனை ஜாமீனை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு வக்கீல் கிருஷ்ணசாமி மூலம் தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 29ம் தேதி ஈரோடு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.