கிராமங்களின் அடிப்படை தேவைகளை அறிய “ஆன்-லைன் திட்டம்” அறிமுகம்

கிராமங்களின் அடிப்படை தேவைகளை அறிய "ஆன்-லைன் திட்டம்" அறிமுகம்
கிராமங்களின் அடிப்படை தேவைகளை அறிய “ஆன்-லைன் திட்டம்” அறிமுகம்

தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் 79 ஆயிரத்து 394 குக்கிராமங்கள் உள்ளன. இந்த குக்கிராமங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு தமிழக அரசு, தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு திட்டம் என்னும் புதிய திட்டத்தை தாய் திட்டம் என்ற பெயரில் அறிமுக படுத்தி வருகின்றது.

பாதுகாக்கப்பட்ட குடிநீர், குழந்தைகளுக்கு தரமான கல்வி, சுகாதார வசதி, சாலை வசதி, வறுமை ஒழிப்பு, தெரு விளக்கு வசதி, கிராம உள்கட்டமைப்பு வசதி,  இடுகாடு மற்றும் அங்கு செல்வதற்கான பாதை, அங்கன்வாடி மையம், குடியிருப்பு, பொதுவிநியோக மையம், சுயஉதவி குழுக்களுக்கு தனியாக கட்டட வசதி, கிராம உள்கட்டமைப்பு வசதி, கதிர் அடிக்கும் களம், குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் உட்பட அடிப்படை வசதிகள் ஒவ்வொரு குக்கிராமங்களிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊராட்சிகளிலும் தற்போது உள்ள கட்டமைப்பு வசதிகள் என்ன?, தேவையான வசதிகள் என்ன என்பது பற்றிய கணக்கீடுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில், ஒரு ஒன்றியத்திற்கு 3 கிராமங்கள் தாய் திட்டத்தின்படி கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய திட்டதின் படி, சம்பந்தப்பட்ட கிராமத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்னென்ன, அவற்றின் பயன்பாடு என்ன, தேவைப்படும் திட்டங்கள் என்ன, அதற்கான உத்தேச நிதி எவ்வளவு என்பது உள்ளிட்ட கணக்குகளை அந்தந்த மாவட்ட ஊரக துறை சார்ந்த மண்டல அலுவலர் தலைமையிலான தனிப்பிரிவு அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
இவை அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு ஆன்-லைனில் வெளியிடப்படும். ஆன்-லைன் மூலமாக சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும். பட்டியலில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே வரும் கால நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த முடியும். இதனால் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தேடி மனு கொடுக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி ஊரக வளர்ச்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது :

ஒரு கிராமத்திற்கு தேவையான அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகள் குறித்து அரசு தேவையான புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட குக்கிராமத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்து தேவைகள் பூர்த்தி செய்யப்படும். ஆன்-லைனில் பதிவு செய்யப்பட்டுள்ள அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். மற்ற திட்டங்களை செயல்படுத்த முடியாது.  இதனால் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் ஆன்-லைனை பார்த்து நமது கிராமத்திற்கு வரவேண்டிய திட்டங்கள் என்னனென்ன என தெரிந்து கொள்ள முடியும். வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டியதில்லை. இந்த திட்டம் அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது சோதனைக்காக சில கிராமங்கள் ஆன்-லைன் வசதியில் அடுத்த மாதம் இணைக்கப்பட்டு விடும். ஒரு வருடத்தில் அனைத்து கிராமங்களும் ஆன்-லைனில் இணைக்கப்படும். இதனால் தாய் திட்டத்தில் அனைத்து கிராமங்களும் பயனடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஒவ்வொரு கிராமத்திற்கும் அடிப்படை தேவை என்ன என்பது பற்றியும் ஆன்-லைனில் அறிந்து கொள்ள முடியும். என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.