கல்வி உதவித்தொகை மோசடி மாவட்ட அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை பாய்கிறது

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரக்குறைவான தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் ராமசந்திரனை நேற்று முன் தினம் தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே கல்வி உதவித் தொகையை கையாடல் செய்த, காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி ஆசிரியர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். 3 தலைமை ஆசிரியர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மாவட்ட அதிகாரி ராமசந்திரன் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இது குறித்து நாமக்கல் டிஎஸ்பி அண்ணாமலை  கூறியதாவது:
பள்ளி ஆசிரியர் சரவணன் வாக்குமூலத்தின் அடிப்படையில் புரோக்கர்கள் பழனிசாமி, மணி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. புரோக்கர் மணியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மெயின் புரோக்கர் பழனிசாமியை தேடி வருகிறோம். கல்வி உதவித்தொகை மோசடி தொடர்பான ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வருகிறது. மாவட்ட அதிகாரி மீது இதுவரை யாரும் எழுத்து பூர்வமாக புகார் அளிக்கவில்லை. விசாணையின் முடிவில் அவருக்கு தொடர்பிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.