இலவசங்களோடு வேலைவாய்ப்பும் கொடுங்கள் – விஜயகாந்த்

விஜயகாந்த்புதிய அரசு பொறுப்பேற்ற ஒன்பது மாதங்களில், அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஐந்து லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். இலவசங்கள் வழங்குவதோடு, மக்களுக்கு வேலைவாய்ப்பையும் அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்” என்று விஜயகாந்த் பேசினார்.

சென்னை வானகரத்தில் நடந்த தே.மு.தி.க, ஏழாவது பொதுக்குழுவில் விஜயகாந்த் பேசியது :

தானே புயலால் பாதித்த மக்களுக்கு எதுவுமே உருப்படியாக செய்யாமல் மானியம், நிவாரணம் எனக்கூறி மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றுகின்றன. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் நாடகம் ஆடுகின்றன. கொள்ளை அடிப்பதில் மட்டும் அ.தி.மு.க., தி.மு.க.,வினர் ஒற்றுமையாக இருக்கின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சட்டசபையில் நான் கையை நீட்டி பேசியதை விட, முதல்வர் அதிகமாக கையை நீட்டி பேசினார். ஆனால், என்னை மட்டும் சஸ்பெண்ட் செய்தார்கள். சபை நாகரிகம் தெரிந்ததால்தான், அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சபையில் இருந்து வெளியேறினேன். விஜயகாந்த் வந்தால் பிரச்னை வராமல் இருக்காது என்பது உண்மைதான். ஆனால், அந்த பிரச்னையில் என்றுமே நியாயம் இருக்கும். எதிர்கட்சியாக இருக்கும்போது, சட்டசபை நடவடிக்கைகளை தூர்தர்ஷன் டிவியில் ஒளிபரப்ப வேண்டும் என்று ஜெயலலிதா, கருணாநிதி கூறுவார்கள். ஆட்சி வந்தவுடன் அதை அப்படியே மறந்து விடுவார்கள். மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுவதற்கு எதிர்கட்சிகளுக்கு போதிய அவகாசமும், பாரபட்சமின்றி சமவாய்ப்பும் வழங்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக, மின் உற்பத்திக்காக எந்த திட்டத்தையும் அ.தி.மு.க., தி.மு.க., அரசுகள் மேற்கொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதில் மட்டுமே குறியாக இருந்துள்ளனர். அதனால்தான் இன்றைக்கு மின்வெட்டால் தமிழகம் இருண்ட பிரதேசமாக மாறி இருக்கிறது. தே.மு.தி.க., கண்டிப்பாக ஆட்சியை பிடிக்கும். முன்பு இப்படித்தான் சொல்லிவிட்டு தான், அ.தி.மு.க.,வுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்தார் என்று பேச்சு எழும். மக்கள் பிரச்னைக்காகவே கூட்டணி வைத்தேன். கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், விஜயகாந்த் கோடி, கோடியாக பணத்தை வாங்கிக்கொண்டு விட்டார் என, பிரசாரம் செய்திருப்பார்கள். தொண்டர்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள்.

இலவசங்கள் வேண்டாம் என்று நாங்கள் சொன்னதில்லை. இலவசத்துடன் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்ற ஒன்பது மாதங்களில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஐந்து லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதுவரை வேலைக்காக பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை, 74 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆட்சியாளர்களை எதிர்த்து பேசினால், ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்கள். அதற்கெல்லாம் அஞ்சாமல், நானும், எனது தொண்டர்களும் எதற்கும் தயாராகவே இருக்கிறோம். தே.மு.தி.க., பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் களப்பணியாற்ற தொண்டர்கள் தயாராக இருக்கவேண்டும். என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.